Sunday, November 27, 2016

இது சினிமா பதிவு அல்ல.

நாயகன் படத்தில் ஒரு காட்சி வரும்.. தனது வளர்ப்பு தந்தையை லாக்கப்பில் கொன்றதற்காக, கமல்(வேலு) அந்த இன்ஸ்பெக்டரை கொல்வார். அடுத்த காட்சியில், கமல் அருகில் இருக்கும் டீ கடைக்கு செல்லும் போது, டீக்கடைகாரர் காசு வாங்க மாட்டார் "ஒண்ணும் வேணாங்க......., நீங்க வந்தா போதும்" என்பார். ஜனகராஜ் "வேலு விட்ரு, இனிமே அப்பிடி தான்.... " என சொல்லி, கமலை இழுத்து செல்வார்.
இருபதுக்கும் குறைவான வினாடிகளில், மிக நுட்பமான அரசியலை வெளிப்படுத்தி அந்த காட்சி நகர்ந்து போகும். கமல் அந்த பகுதியின் பாதுகாவலனாக, அம்மக்களின் பிரதிநிதியாக தோன்றும் புள்ளி அது. மீண்டும் அந்த பகுதிக்கோ, ஏன் தனது கடைக்கோ பிரச்சனை வந்தால், அதை சமாளிக்க "வேலு" இருக்கிறார் என்ற ஒரு எளிய மனிதனுடைய(டீக்கடைகாரர்) சுயநலம் கலந்த பாதுகாப்புணர்ச்சி அது. இன்னும் அதை வெளியில் இருந்து அணுகினால், 'அதிகாரம்' யாரிடம் இருக்கிறதோ, அதை சார்ந்து வாழும் ஒரு தன்மை. அதற்கான நன்றி உணர்ச்சி (இல்லை) கையூட்டு தான் அந்த 'இலவச டீ'.

இன்னும் வெளியே வந்து அந்த காட்சியை பார்ப்போம். 'ஏன் அந்த டீக்கடைகாரருக்கு கமலை சார்ந்து இயங்க வேண்டிய தேவை இருக்கிறது?'. பம்பாய்-தமிழ்-சிறுபான்மையினர் எல்லாவற்றையும் தாண்டி, காவல்துறையை நம்பி வாழ முடியாத சூழல் அங்கு நிலவுகிறது. ஆக, தனது தொழிலை தக்கவைக்க அவர் வேலுவின் பாதுகாப்பை விரும்புகிறார்; அதன் நீட்சியே அந்த 'இலவச டீ'.

இப்போது, வேலு-டீக்கடை என சினிமா கதாப்பாத்திரங்களிலிருந்து வெளியே வந்து விடுவோம். 50 வருடங்களுக்கு முன்பிருந்த அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை. 1966ல் மாணவர் இயக்கங்கங்களின் செயல்பாடுகள் பற்றி புத்தங்கங்களில் நாம் வாசித்திருப்போம்...ஏன், முப்பத்தி ஐந்து வயதை கடந்தவர்களால், தங்களது பால்யத்தில், இது போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை, கண்முன்னே கடந்து வந்தவர்களாக இருந்திருக்க கூடும். இன்றைய உலகமயமாக்கல் நம்மிடமிருந்து முதலில் பிடுங்கி எறிந்தது இந்த மாணவ அரசியல் செயல்பாடுகளை தான்.

50 களில், சமூக பிரச்சனைகள் ஊடக தனிமனித பாதிப்பை உணர்ந்தவர்களால், உந்தி தள்ளப்பட்டு, கிடைத்தது தான் சமூக நீதி பார்வையும், ஹிந்தி திணித்தலுக்கு எதிரான கிளர்ச்சி உணர்வும். இன்று தனிமனித பாதிப்பின் வெளிப்பாடு எப்போது ஒட்டு மொத்த சமூகத்தை பாதிக்கிறதோ அப்போது தான் கிளர்ச்சிகள் எழுகின்றன. அதை கூட இந்த ஆளும் வர்க்கம், பிரச்சனைகளை பகுதி வாரியாக பிரித்து, தனது ஊடக பலத்தால் அதற்க்கு எதிர் கருத்துகளை உருவாக்கி ஒரே இனமக்களை எதிர் துருவங்களாக நிற்க வைக்கிறது. ஆக, ஒரு பிரச்சனைக்காக ஒரு கொள்கை சார்ந்து ஒன்றிணைய, நம் முன்னால் இருக்கும் அரசுசார் ஊடகங்கள் முதல் அரசவர்க்கத்தை வரை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள். போதாததற்கு, வேலைவாய்ப்பும், அது சார்ந்த கேளிக்கை உலகும், பழைய அரசுகளுக்கு எதிர்ப்புறமாய் இருப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாய் குறைவாக்குகிறது.

 தொடர்ச்சியாக இரு அரசியல்கட்சிகள் மட்டும் எப்படி வெற்றி பெறுகின்றன? புதிய பொருளாதார கொள்கை, ஊழலை மித மிஞ்சியதாக்கி, சர்வாதிகாரமும், "சார்பு நிலையில்" சாமானிய மனிதர்கள் வாழும் சூழ்நிலைக்கு அவர்களை கொண்டு சேர்த்திருக்கிறது. மீண்டும் நாயகன்-வேலு-டீக்கடை உதாரணத்திற்கு செல்வோம். அந்த டீ கடைகாரர், வேலுவை சார்ந்து தனது வாழ்க்கையின் பாதுகாப்பு உணர்வை எப்படி அதிகப்படுத்தினாரோ, அது போல அதிகாரத்தில் இருப்பவனை சார்ந்து இயங்கும் ஒரு சூழலை இன்றைய சோ கால்ட் 'ஜனநாயக அரசுகள்' உருவாக்கி வைத்திருக்கிறது.

 தண்ணி போட்டு விட்டு வாகனத்தில் போய் போலீசாரிடம் மாட்டினால், ஆளுங்கட்சியில் இருக்கும் ஒரு வட்ட செயலரை தெரிந்து வைத்திருந்தாலோ இல்லை, ஒரு கட்சியில் உறுப்பினர் அட்டை வைத்திருந்தாலோ, எந்த தண்டனைக்கும் உட்படாமல் தப்பித்து வந்து விடலாம் என்ற சூழ்நிலை தான் நம் முன் உள்ளது. 'சல்மான் எந்த கட்சியை சார்ந்து இயங்கினார், எப்படி வெளிய வந்தார்' என்பதை எல்லாம் சமகால உதாரணமாக நாம் இங்கே எடுத்துக்கொள்ளலாம். ஆக, தெரு குழாய்க்கு தண்ணீர் வரவில்லை என்பதிலிருந்து, தெரு விளக்கு எரியாததற்கு கூட இங்கே இந்த சார்பு நிலை இருக்கிறது. ஒரு கவுன்சிலரை நேரடியாக தெரிந்து வைத்திருந்தால், அடுத்த வீட்டுகாரர் செய்ய முடியாத ஒருவிடயத்தை தம்மால் செய்து முடிக்க முடியும் என்ற ஒரு மிகப் பெரிய அதிகார அடுக்கை, சாமானியனுக்கு புலப்படாத கண்ணியை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆக, அதை வைத்து தான் இங்கே ஓட்டரசியலும் செயல்படுகிறது. கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி, வாரிசுகளில் வாரிசுகளுக்கு பதவி, ஊழல் என வெளியே, எத்தனை விமர்சனம் வந்தாலும் 'வாக்கு வங்கி' யை தக்கவைத்து கொண்டிருக்கும் சூட்சமம் என்னவோ இந்த 'சார்பு தன்மை' தான்..

 மிகவும் உன்னிப்பாக இங்கே கவனிக்க வேண்டிய விடயம், இந்த 'சார்பு நிலை' கடைமட்ட அளவில் மட்டுமே இருக்கிறது. சராசரி வாழ்க்கையில், அரசை சார்ந்து இயங்கும் தன்மையில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து, அடிமட்ட அளவிலேயே அரசியல் தலைவர்களை சார்ந்து இயங்கும் தன்மைக்கு கொண்டு விட்டிருக்கிறது, இன்றைக்கு இருக்கும் அபாயகரமான ஜனநாயக சூழல்.

அதனால் தான் 2016 தேர்தலில் தமிழகத்தின் முதலிரண்டு கட்சிகளே மீண்டும் முதலிரண்டு வரிசையில் அமர்ந்தது, இடைதேர்தல்களிலும் அது பிரதிபலித்தது. இந்த 'சார்பு நிலை' அரசியலோடு சாதி மற்றும் மதம் எப்படி சேர்ந்து இயங்குகிறது என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment