Sunday, January 26, 2014

101 சோத்யங்கள் (101 கேள்விகள்) : 101 Chodyangal

நான்: லேய் மக்கா, அவங்க உனக்க அம்மையில்லியா?
குமார்: இல்ல மக்கா, அவங்க எனக்க பெரியம்ம.. அவங்க தான் எங்கள சின்ன வயசுல இருந்து வளக்கிறாங்க..


நான்: உனக்க அம்மையை உனக்கு ஓர்ம இருக்கா?


குமார்: ம்ம்.. ஆனா, ரெண்டு தங்கச்சிமாருக்கும் ஓர்ம இருக்குமான்னு தெரியல..

நான்: எப்பிடி இறந்தாங்க?
குமார்: தெரியாது?

நான்: நீ அழுதியா?
குமார்: இல்ல அழல்ல.. எல்லாரும் சொன்னாங்க 'மக்களே கொம்ம செத்து பெய்ட்டா... அழுலன்னு' எனக்கு அழுகையே வரல்ல.. ஏன் நான் அழல்லன்னு இன்னும் தெரியல?!?!


--------------------------------------------------------------


ஒரு சாதாரண அடிமட்ட தொழிலாளியாக, தான் பணிபுரிந்துவரும் ஆலையை விட பெரிய ஆலையை தன் மகன் கட்ட வேண்டும் என்றஆசையோடு, இந்தியாவின் தொழிற்சாலை நகரமான 'பொக்காரோ' வை தன்மகனுக்குப் பெயராக வைத்து, பெரும் கனவுகளோடு வாழும் சிவானந்தன், தொழில்சாலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார். அரசு ஆரம்பப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் மூத்த மகன் அனில்குமார் பொக்காரோ, புத்தி சுவாதீனமற்ற  இளையமகள், குடும்பத்தை நடத்த அரசின் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு வேலைக்கு செல்லும் மனைவி என கஷ்டமான குடும்பச்  சூழ்நிலை.




அனில்குமார் படிக்கும் அரசுப்பள்ளியில் புதிய ஆசிரியராக வரும் முகுந்தன், ஆசிரியர் பணி அல்லாது நாடகங்கள், சமூக சேவை, சிறுபுத்தகங்கள் எழுதுவது என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். அனில்குமாரின் குடும்பச்சூழ்நிலையை தெரிந்துக்கொண்டு, அவனிடம் தன்னிடம் வந்த புத்தக வேலையின் ஒரு பகுதியை செய்யச்சொல்கிறார். ஆம், பதில் கிடைக்கக்கூடிய 101 கேள்விகளை உருவாக்கச்சொல்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு ரூபாய் வீதம் நூற்றியொரு ரூபாய் அவனுக்கு தருவதாக ஒப்புக்கொள்கிறார். கேள்விகளை தேடி அனில்குமார் அலைகிறான்.

இதனிடையே, ஆலையில் இருந்து நீக்கப்பட்ட தனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும் என தொழிற்சங்கவாதிகளுக்கு பின்னாலும்,  அரசியல்வாதிகளுக்கு பின்னாலும் நடையாய் நடக்கிறார் சிவானந்தன். அனில்குமாரின் குடும்பச்சூழ்நிலை மோசமாக, அவன் எழுதி வைத்திருந்த அறுபது கேள்விகளுக்கான பணத்தை முகுந்தன் அவனுக்கு கொடுத்து மீண்டும் நாற்பத்தி ஒரு  கேள்விகளை தேடிச்செல்லுமாறு சொல்கிறார்.அந்த அறுபது ரூபாயில் அன்று சிவானந்தன் வீட்டு உலை கொதிக்கிறது.


நூறு கேள்விகளை தேடித்தேடி அனில் கண்டுப்பிடிக்கிறான். உற்சாகத்தோடு வீட்டுக்கு வரும் வழியில், தந்தை விழுந்து கிடப்பதை பார்க்கிறான்.. ஆம், சிவானந்தன் இறந்து கிடக்கிறார். அனில்குமாரின் தந்தை இறந்துவிட்டதை அறிந்து தொழிற்சங்கவாதிகளும், அனிலின் சக பள்ளி மாணவர்களும் வருகிறார்கள்.. முகுந்தனும்..




மரணவீட்டில் முகுந்தனை பார்த்த அனில்குமார், நூறு கேள்விகள் எழுதிய நோட்டுப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கேட்கிறான் "சார், இதில நூறு கேள்வி இருக்கு.... எனக்கு தோணுறதை தவிர, இந்த கேள்விகளுக்கு சரியான விடை எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்துக் கொள்ளவும் ஆசை இல்லை. ஆனா, சார் எனக்கு என்னோட நூற்றி ஒண்ணாவது கேள்விக்கு பதில் தரணும்.. எனக்கு என்னோட அப்பாவை ரொம்ப பிடிக்கும். அப்பாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அம்மாவும் சொல்லுவாங்க, எனக்கும் தெரியும் அப்பா இறந்தால் குழந்தைகள் அழணுமுன்னு..ஆனா, சாரே எனக்கு மட்டும் ஏன் அழுகை வரல்ல?". ஆசிரியர்களும், சுற்றி இருந்தவர்களும் விக்கித்து நிற்க விடையில்லாத அந்த கேள்வியோடு படம் நிறைவடைகிறது.



----------------------------------------



படத்தைப் பார்த்து முடித்த போது எனக்கு குமாருடைய விடையில்லாத குமுறல் தான் நினைவுக்கு வந்தது. மரணம் வெகுசூனியமானது... நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அது ஒருநாள் நம்மை அடைந்தே தீரும். நெருக்கமான ஒருவருடைய மரணம் நமக்கு அழுகையை கொண்டுவருகிறது  என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால் நெருக்கமான ஒருவருடைய மரணத்தில் அழுகை வரவில்லையென்றால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.


அந்த 101 ஆவது கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்..அப்பதிலை அனில்குமாரிடம் என்னால் சொல்ல முடியாது... ஆனாலும், குமாரிடம் என்னால் சொல்ல முடியும்.





புகைப்படங்கள் உதவி: பல்வேறு இணையதளங்கள்.