Sunday, December 28, 2014

தமிழகத்தில் பிஜேபியை தள்ளி வைக்கும் 10 விஷயங்கள்



(1) தமிழர் பிரச்சனைகள்:
 தமிழ்நாட்டில் இன்றளவும் மிக முக்கியமான பிரச்சனைகளாக இருக்கும் கூடங்குளம், மீத்தேன், முல்லைப்பிரச்சனை,காவேரி போன்றவைகளில் திடமாக தமிழ் மக்களோடு கைகோர்த்து நிற்கும் அளவில் தமிழ்நாடு பிஜெபி இல்லை. அண்டை மாநில பிஜேபியினர் இதுபோன்ற பிரச்சனைகளில் தமது மாநில நன்மையை முன்வைத்தே பேசுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் (உதா: அணுவுலை, அணுக்கழிவு பிரச்சனை).
(2) திராவிட கட்சிகளின் இந்துமத சமரசம்: அதிமுக தனது கட்சியின் பெயரில் 'திராவிடத்தை' கொண்டிருந்தாலும் கால்நூற்றாண்டுக்கு மேலாக 'அரை-பிஜேபி' யாக தான் ஆண்டு வருகிறது. ஆக, நடுத்தர மற்றும் அடித்தட்டு தமிழ் சாமானிய இந்து மக்கள் 'திராவிட கட்சிகள்' தங்கள் மதத்தை அழிக்காது என்பதை தெளிவாய் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
(3) ஆளுமை பற்றாக்குறை: காங்கிரஸ் இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் தாக்குப்பிடித்ததற்கு மிக முக்கியமான காரணம் காமராசர் என்ற ஆளுமை. அவருக்கு பிறகு வந்த ஒருசில காங்கிரஸ் தலைவர்களும் ஓரளவுக்கு தமிழ்நாட்டை மத்தியில் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தும் பிஜேபி ஆளுமை தமிழ்நாட்டில்\டெல்லியில் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்?
(4) வட மொழி திணித்தல்: ஹிந்தியை கற்றால் மட்டுமே வட மாநிலங்களுக்கு போய் வேலை பார்க்க முடியும் என்ற காலகட்டம் ஒன்று இருந்தது. உலகமயமாக்கலுக்கு பிறகு, அனைத்து தேசிய இனங்களின் மக்களும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது இயல்பாக நடந்தேறி வருகிறது. இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் போக்குக்கு இயல்பாகவே முகசுழிப்பும், எதிர்ப்புணர்வும் பரவி வருகிறது என்பது தான் நிதர்சனம். 

(5) கல்வியறிவு: பிஜேபி பலமாக இருக்கும் பல மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியறிவில் மிகச்சிறந்த இடத்தில் உள்ளது. இந்துக்களாக தங்களை பதிவு செய்துகொண்டாலும், திராவிட கோட்பாட்டின் மீதான பற்றை அக்கல்வி அவர்களுக்கு கொடுத்துள்ளது. (இடஒதுக்கீட்டு விஷயத்தில் பிஜேபியின் கடந்தகால அணுகுமுறைகளை தமிழர் மனங்களில் இருந்து அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது).


(6) பண்பாட்டு ரீதியான வேறுபாடு: நடுகல் மற்றும் குலசாமி வழிபாடு மரபு, தமிழர் இரத்தத்தில் ஊறிப்போய் கிடக்கிறது. கோயிலில் ஆடு\கோழி வெட்டக்கூடாது என்ற போது கிளர்ந்து எழுந்த சமூகம் இது. அச்சமூகத்தின் மீதான 'சமிஸ்கிருதமாக்கல்' போன்ற பண்பாட்டு ரீதியான திணித்தலுக்கு பின்னால் இருக்கும், 'நாம்-அவர்கள்' என்ற இடைவெளியை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். ஆக, 'இந்துநாடு' என்ற கோஷம் தமிழகத்தில் எடுபடாமலே இருக்கிறது.


(7) கும்பல் அரசியல் மற்றும் கேட்பாட்டு ரீதியான அரசியலின் தேவையின்மை :  தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டிருக்கும் சில இயக்கங்களின் 'அடாவடி' அணுகுமுறைகள் வெகுஜனங்களை எந்த அளவிலும் திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மை. சிறுபான்மையினர் சரிக்கு சமமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கேரளாவோடு ஒட்டி இருக்கும் மாவட்டங்களை தவிர்த்து பிஜேபி தமிழ்நாட்டில் அரசியல் பேச எந்த காரணமும் இல்லாமல் இருப்பது. 

(8) ரசிக மனோபாவமும், தனிமனித வழிபாடும்: காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் வாக்குவங்கிக்கு பின்னால்,  'காமராசர்', 'கலைஞர்', 'எம்ஜிஆர்' என்ற பிம்ப வழிபாடுகள் பெரும்பங்கு வகிக்கிறது . ரஜினியை எப்படியாவது பிஜேபியில் இழுத்து விட வேண்டுமென்ற  பிஜேபின் தந்திரமும் இது தான்.ரஜினி தனிப்பட்டமுறையில் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்தவரில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள், அரசியலில் களத்தில் அவரை நிராகரிப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.


(9) அதீத காழ்ப்புணர்ச்சி அரசியல்: பிஜேபி மற்றும் அதன் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் போன்றவை, சிறுபான்மையினரை ஒரு மனிதகுல விரோதி போல கற்பிக்க துவங்குகின்றன. நடைமுறையில் ஒரு சாமானிய கிறிஸ்தவனையோ\இஸ்லாமியனையோ ஆர்.எஸ்.எஸ்\பிஜேபி கருத்துருவாக்கத்தால் வளர்க்கப்பட்டவர்கள் எதிர்க்கொள்ளும் போது, தமக்கு கற்பிக்கப்பட்டதில் எத்தனை சதவீதம் உண்மை\பொய் இருக்கிறது என்பதை அவர்களே பகுத்தறிந்து, அந்த இயக்கங்களின் சித்தாந்தங்களில் இருந்து 'பெரும்பாலானோர்' வெளியே வருகின்றனர். RSS இயக்கம் துவங்கி ஏறக்குறைய 90ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஹிந்துக்கள் பெரும்பான்மையானோர் வாழும் நாட்டில் இன்றளவிலும் பல்வேறு பகுதிகளில் இவர்களால் ஊடுருவ முடியாததற்கு காரணம் இவர்களின் அதீத காழ்புணர்ச்சி அரசியலை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?.

(10) சாதி ரீதியான ஓட்டுக்கள்: இரட்டைக்குவளை, தடுப்புச்சுவர்கள் என சாதி ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்து எந்த குரலையும் கொடுக்காமல் மற்ற கட்சிகளை போலவே அந்தந்தப்பகுதி ஆதிக்க சாதியினருக்கு பின்னால் மற்ற கட்சிகளைப் போல ஒளிந்துக்கொள்கிறார்கள். கோயில் நுழைவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை போன்ற முக்கியமான பிரச்சனைகளில் தமிழக பிஜேபி யின் நிலைப்பாடு என்ன என்பது கமலாலயத்துக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment