Thursday, May 31, 2012

நன்றி விகடன்...


2007 ஆகஸ்டில் பதிவு எழுத வந்து 2012 மே மாதத்தின் இறுதி நாளான இன்று வரை வெளியிட்டிருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை 82 . அவ்வளவு சுறு சுறுப்பு... நான் இணையம், வலைப்பூ பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு பதிவு எழுத வரவில்லை என்பதை முதலில் நேர்மையோடு ஒப்புக் கொள்ள கடமை படுகிறேன். காகிதத்தில் கவிதை எழுதி சுருட்டி போட்டுக் கொண்டிருந்த நாட்களில் ஆர்குட் கவிதைகள் குழுமம் மிகப் பெரிய வரபிரசாதமாக இருந்தது. அப்படி ஒரு தருணத்தில் தான் என்னுடைய கவிதை ஒன்றை சேகரிக்கும் பொருட்டு வலைபூ துவங்கி அதில் இட்டு வைத்தேன்..


தொடர்ச்சியான் பணி சூழ்நிலைகளினாலும், இணையவெளியில் வலைபூக்களின் வீச்சு பற்றி அறியாததாலும் எனது வலைப்பூவை தூசி படிய இட்டிருந்தேன். என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இணையம் மீது மீண்டும் ஆர்வம் வர 2009 - ல் பழைய கவிதைகளை எடுத்து மீண்டும் பதிக்க துவங்கினேன்.

 ஈழத்தையும் அதன் துயரையும் முத்துகுமரன் தன் மரண சாசனத்தின் மூலம் சொல்லி அதன் துயரை தமிழர்களுக்கு கடத்திச் செல்ல மனம் வெம்பி எழுதிய கவிதையை வலையேற்றினேன்.

 கவிதைகளாகவே பதித்து கொண்டிருந்த நாட்களில் ஏன் நமக்கு பிடித்த விஷயங்கள் பற்றி எழுத கூடாது என யோசித்து, பயணங்கள் பற்றி நான் முன்பே அலைபேசியில் எழுதி வைத்திருந்ததையும் , நினைவின் இடுக்கில் நின்றிருந்த 'கூந்தவண்டி' பற்றியும் எழுதி வலையேற்றினேன். கடந்து போன கிராமத்து நாட்களை இணையத்தில் பதித்த போது கிடைத்த வரவேற்பு மீண்டும், மீண்டும் கிராமத்தையே சுற்றி வர செய்தது.


இந்த சூழ்நிலையில் தான் கிழக்கு பதிப்பகத்தின் மூலம் இலவசமாய் கிடைத்த 'ராதாயணம்' புத்தகத்தை பற்றி விமர்சனம் எழுதி பதிவிட்டேன். நூலில் ஆசிரியரே வந்து பின்னூட்டம் இட்ட உற்சாகத்தில் அடுத்தடுத்து புத்தக விமர்சனங்களாக எழுதி குவித்தேன்.

ஈழம் அப்போது தமிழர்கள் கையை விட்டு முற்றிலுமாக போயிருந்தது. ஆளும் அரசின் மீதும் அதிகாரவர்கத்தின் மீதும் திரும்பிய கோபத்தில் சில இடுகைகள் என்னிடமிருந்து வெளிவந்தன.

தொடர்ந்து சமகால அரசியலை கையிலெடுத்து எழுத துவங்க ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் குவிய துவங்கியது கூடவே குற்றச்சாட்டுகளும். அஜித்தை பற்றி எழுதினால் நான் அவருக்கு ரசிகன் என்றும், அரசை எதிர்த்து எழுதினால் நான் எதிர்கட்சிகாரன் என்ற ரீதியில் வரும் பின்னூட்டங்களை சமாளிக்க முடியாமல் அரசியல் பதிவுகள் எழுதுவதில் இருந்து வெளியே வந்தேன்.

இணையம் எவளவு உன்னதமான ஊடகம் என்பதை என் நண்பனுக்காக யாசகம் கேட்ட போது தான் உணர்ந்தேன். உலகெங்கும் இருந்து தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என தங்கள் நேசகரங்களை நண்பனை நோக்கி நீட்ட, ஒரு அணிலாய் என்னால் முடிந்த உதவியை செய்தேனே என்ற திருப்தி.. அது, ஆயுசுக்குமான திருப்தி.


இடைப்பட்ட நாட்களில் வாசிப்பு அதிகமாக மீண்டும் புத்தக விமர்சனங்கள் வலம் வர துவங்கின. அதில், எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் முதல் நாவலான ரப்பருக்கு நான் எழுதிய விமர்சனத்தை மிகமுக்கியமான ஒன்றாக கருதுகிறேன். இணையவெளியில் பரவலான விமர்சனத்திற்கு இந்த பதிவு உட்படுத்தப்பட்டது. அவற்றை கடந்து வர எனக்கு சற்று காலம் அவகாசம் தேவைபட்டது என்பதும் உண்மை.

பின் மீண்டும் எனது பதிவுகள் எனது பால்யத்தையும் அதன் அனுபவங்களையும் வட்டமடிக்க துவங்கின. இந்த நிலையில் தான் ஆனந்த விகடன் வார இதழ் தன்னுடைய மதுரை 'என் விகடன்' பதிப்பில்(23 -மே -2012) வெளியிட்டு என் எழுத்துக்கான அடுத்த கட்ட அங்கீகாரத்தை தந்தது. எதிர்பார்க்கவே செய்யாத அளவில் சில அலைபேசி அழைப்புகளும், வாழ்த்து மடல்களும் வந்து மனதை பூரிக்க செய்தது. மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்கும் போது பிரமிப்பாகவே இருக்கிறது.. என்னை, எனது எழுத்தை உருவாக்கிய அப்பா, அம்மாவில் இருந்து என்னை செப்பனிட்டவர்களை பட்டியல் இட்டால் ஒரு நாள் போதாது.

ஆனாலும்......

விகடனில் எனது பதிவு வெளிவர எனக்கு உந்து சக்தியாக இருந்த இணையம் எனக்களித்த தம்பி ஸ்நாபக் வினோத்தும், 'லே மாப்பிள எழுதுல.. இப்படி எழுதாம இருந்தா கையை ஓடிச்சு புடுவேன் பத்துகோ' என தொடர்ந்து என்னை மிரட்டிகொண்டிருக்கும் அண்ணன் 'தல' பாலபாரதிக்கும் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. நன்றி தம்பி, தல.

மற்றபடி........

 'எப்பா இப்படி எல்லாம் இருந்தீங்களா?' என என் ஒவ்வொரு கிராமத்து பதிவையும் ஆச்சரியத்தோடு முதலில் படித்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் எனது மனைவிக்கும்...

பதிவு எழுதாவிட்டாலும் குறைந்தபட்சம் மின்னஞ்சல் குழுமத்தில் என்னை தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருக்கும் என் பண்புடன் குடும்பத்திற்கும்...

என் எழுத்துக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் என் மண்ணுக்கும்-மண்ணின் மைந்தர்களுக்கும்...

 இந்த அங்கீகாரத்தை சமர்ப்பிக்கிறேன்..