Monday, October 31, 2011

அண்டி கிறிஸ்து

அண்டி கிறிஸ்து எப்படியாவது பிறந்து விடுவான் சீக்கிரம் உலகை அழித்து விடுவான் என கிளிப்பிள்ளை போல் சொல்லி கொண்டும், நம்பிகொண்டிருந்த நிக்கர் போட்ட காலகட்டம். அண்டி கிறிஸ்த்து அழகாக இருப்பான், அவனுடைய தலையில் 666 என எழுதப்பட்டு இருக்கும் என்ற சித்திரம் எங்களுக்குள் உருவாக்கப்பட்டு இருந்தது.

சில நேரங்களில் வெளிநாட்டுகளில் அண்டி கிறிஸ்து பிறந்தே விட்டான் என ஊரில் வயதான கிழவிகள் பேசி கொண்டு இருப்பார்கள். எனக்கு வரும் சந்தேகங்களை தீர்த்து வைப்பது மலர் அக்கா தான். இது போன்ற கதைகள் உண்மையா என கேட்டால் போதும் கையும், காதும் வைத்து சொல்லி விடுவாள். அவன் பிறக்காமல் இருக்க தினமும் ஜெபம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லுவாள். என்னை போன்ற நிக்கர் சிறுவர்களில் ஒவ்வருவர் மனதிலும் ஒரு அசைக்க முடியாத வாதையாக அவன் அந்நாட்களில் உருவெடுத்து நின்றான். ஒவ்வருவர் மனதிலும் ஒவ்வரு சித்திரம் வரைந்து வைத்திருந்தோம். பாதிரியார் கோயில்களில் அவனை பற்றி சொல்லாத போதும் எங்கள் ஜெபங்களில் அவன் பிறக்ககூடாது என்று சொல்லி கொண்டோம்..

Anti Christ என்பதை தான் அண்டி கிறிஸ்த்து என சொல்கிறார்கள் என புரிந்து கொள்ள ஆரம்பித்த பயம் போன வயதுகளில் கோயில் செல்லாத ஒரு இளவட்டம் ஊரில் உருவாகி இருந்தது. ஞாயிற்று கிழமை என்றாலே எங்கள் வாசம் ஊர் எல்லையில் இருக்கும் குளக்கரை தான். ஏறக்குறைய அண்டி கிறிஸ்த்து பற்றிய கற்பிதங்கள் அப்போது மனதில் இருந்து மறைந்து இருந்தது.

மலர் அக்காவுக்கு அப்போது திருமணமாகி, மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. குளத்தின் பெண்கள் சப்பாத்தில் (பெண்கள் குளிக்கும் பகுதி) குளித்து விட்டு தன் குழந்தையோடு வந்து கொண்டிருந்தாள். ஊருக்குள் செல்வது என்றால் ஆண்கள் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். பூசை துவங்குவதற்கு அடையாளமாக சேரிக்கடை வேத கோயிலின் மணி ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது. வலது கையில் குழந்தையை இழுத்தவாறு மணி ஓசை வந்த திசையை பார்த்தவாறே பக்தியாய் முணு முணுத்தவாறு எங்களை கடந்தாள்.

சுனில் மெல்ல தலையை திருப்பி "அக்கோ.. ஓடி போ, மணி அடிச்சாச்சி.... சாமியாரு ஆசிர்வாதம் கொடுத்துட்டாருன்னா அப்புறம் கிடைக்கவே செய்யாது"

சட்டென எங்களை ஊடுருவி ஒருமுறை முறைத்து "போங்கல அண்டி கிறிஸ்துக்களா' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தாள்.
ஏறக்குறைய எங்கள் மனதில் இருந்து அழிந்தே போன அண்டிகிறிஸ்து எங்கள் முன் இருப்பதாக நினைத்தோம்; நாங்களே அண்டிகிறிஸ்து ஆனதை எண்ணி உரக்க சத்தம் போட்டு சிரித்தோம்.. தலையை தடவிக்கொண்டோம் துரதிசடவசமாய் யார் தலையிலும் 666 இல்லை.

1 comment:

  1. அண்ணே, அற்புதமா இருக்கு... மறந்து போன அந்தி கிறிஸ்து கதைகளை நியாபகப்படுத்தியமைக்கு நன்றி.

    எனக்கு சிறுவயதில் மறக்க முடியாத, நான் மிகவும் பயந்த கதை "பாவம் செய்தால் பாம்பு கொத்தும்" பற்றிய வேதக் கதை தான்... பல நாள் சிறுசிறு தவறு செய்துவிட்டு தூங்காமல் கனவில் பாம்போடு கஷ்டபட்டு இருக்கிறேன்... இப்போது தவறுகள் பெரிதானாலும் பாம்பு மட்டும் வரவே மாட்டேங்குது ஏன்...?? :))

    ReplyDelete