Wednesday, August 12, 2009

வட்ட பேரு - II


வழக்கம் போல் மதியம் உண்ட மயக்கத்தில் கொட்டாவி விட்டபடி வேலை(!) செய்து கொண்டிருந்தேன் அலுவலகத்தில்...... நகரும் நாற்காலியில் மெதுவாக ஊர்ந்து அருகில் வந்த பக்கத்து இருக்கை தோழன் " நண்பா... விசயம் தெரியுமா?.. நம்ம ஆபீஸ்......................" என்றான். "யாரு சொன்னா?" எரிச்சலுடன் நான் கேட்டேன்... "நம்ம பாக்கியராஜ் தாம்பா" என்றான். "பாக்கியராஜ்!" என முழித்து வினவிய போது... "யோ பாக்கியராஜ் தெரியாதா" என கேட்டு காதில் மெதுவாய் கிசு கிசுத்தார்..

ஆச்சரியப்பட்டு போனேன். என் வட இந்திய மேலதிகாரி தான் பாக்கியராஜ் ஆகி இருந்தார். மெல்ல சிரித்து விட்டேன்.. எல்லோரிடமும் கொஞ்சம் சிடுமூஞ்சியாக இருப்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாக்கியராஜ் ஆகி இருந்தார். இன்னும் மனம் யோசிக்க இவருடைய முகம் நிஜ பாக்கியராஜோடு எங்கோ பொருந்தி போனது..

வருடங்கள் வேகமாய் உருண்டோடி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை... பால்ய வயதில் வட்ட பேருகள் பெரும்பாலானவை முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.... இன்று ஆயிரக்கணக்கான வான் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வாடிக்கையாளரோடு கணிப்பொறியில் பேசி வேலை பார்க்கின்ற இடங்களில் வட்ட பேரின் வடிவும், நிறமும் கொஞ்சம் மாறியிருக்கிறது, ஆனால் தொலைத்து விடவில்லை. இன்றைய வட்ட பேருகள் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களின் பெயர் தாங்கியே வருகிறது... எ.கா. கவுண்டர், சேம் ஆண்டர்சன், சரளா அக்கா....

சிறு வயதில் ஒவ்வொரு கிராமத்து வாண்டுக்கும் ஏதோ ஒரு வட்ட பெயர் இருந்தே தீரும் என்பது எழுத படாத விதி.. எனது கிராமத்தில் ஒரே ஒரு சிறுவனுக்கே ஐந்துக்கு மேற்பட்ட வட்டபேருகள் இருந்ததாய் ஞாபகம். ஒரு கிராமத்தில் வட்டபேருகள் இல்லாத சிறுவனை தேடி எடுப்பது வெகு சிரமம்.

வட்டபேருகள் இல்லாத சிறுவனை நீங்கள் கண்டு பிடித்து விட்டால், அவன் தனித்தே தெரிவான்.. சுருக்கமாய் சொன்னால் எந்த வம்பு தும்புக்கும் போகாத அம்மாஞ்சி... ஆனால் காலம் ஏதோ ஒரு கணத்தில் அவர்களுக்கும் ஒரு பெயரை ஒளித்து வைத்து விடுகிறது "ஊத்து" என்று.

சுவாரசியம் பாருங்கள்... ஒரே வட்ட பேருடைய இரண்டு நபர்கள் பெரும்பாலும் நம் வாழ்க்கையில் கடந்து போயிருப்பார்கள், சில நேரம் அதற்கு நீங்களே ஒரு காரணியாகவும் இருந்து இருப்பீர்கள்.. புரியவில்லையா? உங்கள் ஊரில் "மாக்கான்" என்ற வட்ட பேருடைய ஒருவன் இருக்கிறான்.. அந்த பெயர் உங்களுக்கு (இது நீங்கள் என்பது அல்ல, நானாகவோ இல்லை வேறு ஒருவராகவோ இருக்கலாம்) மிகவும் பிடித்து(!) போய் விடுகிறது. உடனே உங்களுக்கு மிகவும் பிடிக்காத வகுப்பு மாணவனுக்கு அந்த பெயரை சூட்ட அவன் எதிரிகளிடம் சிபாரிசு செய்வீர்கள்... நீங்களே வட்ட பேரு சூட்ட உங்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி "பலம் ".

- தொடரும்

வட்டபேரு - I படிக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. 'வட்டபேரு' படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி Andrea

    ReplyDelete