Wednesday, August 26, 2009

எதிர் வீட்டுக்காரம்மா



"நிஜமாவா சொல்ற?" ஆச்சரியத்தோடு மனைவியை நோக்கி கேட்டேன். லாட்டரியில் பரிசு விழுந்தது என சொல்லியிருந்தால் கூட இத்தனை ஆவேசமாக கேட்டிருப்பேனா என சந்தேகம்...... 'அப்படி என்ன' என்று யோசிக்கிறீர்களா?...... நாங்கள் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் இருக்கும் எதிர் வீட்டுக்காரம்மா என் மனைவியிடம் பேசியிருக்கிறார்கள்.

'யோ.....'-பொறுங்கள் நீங்கள் முறைப்பது புரிகிறது.. எதிர் வீட்டில் இருக்கும் அந்த பெண்மணியை பற்றி முழுதாய் தெரிந்திருந்தால் இப்படி முறைக்க மாட்டீர்கள்...... 'ஓ.....அப்படியா' என கேட்பீர்கள்........

பேச்சுலராய் சுமார் 10 ஆண்டுகளாக சேவல் பண்ணையில் காலத்தை ஓட்டி விட்டு, திருமணமான புதிதில் மனைவியோடு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடி வந்தேன்...... இங்கே குடி புகுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வந்திருந்தேன். பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ஆயிற்றே நாமாகவே அறிமுகப்படுத்தி கொள்வோம் என்று ஆர்வமிகுதியால் காலிங் பெல்லை அழுத்த, நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் கதவை திறந்தார்.

நான் தான் பேசிக்கொண்டிருந்தேனே ஒழிய அவரிடம் இருந்து ம்.... ஹும்..... என் கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்...... அவருடன் பேசிக்கொண்டிருந்த அந்த இரண்டு நிமிடங்களிலும் வீட்டை கண்களால் ஒரு நிமிடம் அலசி விட்டேன்.

மத நம்பிக்கை மிகுந்த குடும்பம் என்று சுவரில் இருந்த புகைப்படங்கள் காட்டியது, தொலைக்காட்சியில் 1:30 மணிக்கு வரும் தொடரின் நாயகியின் சோகத்தை பங்கெடுத்து கொண்டிருந்தார் அவருடைய மனைவி(எதிர் வீட்டுக்காரம்மா). அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இருப்பதற்கான முகாந்திரமே இல்லை.
நான் பேசி திரும்பிய போது சம்பிரதாயமாக என் பெயரை கேட்டார், நானும் சொல்ல, மேலும் அவருடைய முகம் இருண்டு போனது தான் மிச்சம்........ அவருக்கான "நான்" அல்ல என்பது மட்டும் புரிந்தது.

மனைவியோடு குடி வந்த முதல் மாதத்தில் நேருக்கு நேராக சந்தித்த போதும் கூட எங்கள் புன்னகைக்கு பதிலாக சம்பிரதாய புன்னகையை மட்டும் உதிர்த்து போனார்கள்......

பெரும்பாலான நேரங்களில் வீடு பூட்டியே இருந்தது..... நானும் அவர்களிடம் பேச வேண்டும் என்று ஓரிரு முயற்சிகளுக்கு பின் முயற்சிக்காமலே விட்டு விட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்....'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்று சொல்வார்கள். அது போல தான் இன்றும் நடந்திருக்கிறது...... அது தான் என் ஆச்சரியத்துக்கு காரணம். வட இந்தியாவில் கணவரோடு வாழ்ந்து கொண்டிருந்த அவருடைய ஒரே மகள் கர்ப்பமுற்று அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். என் மனைவி ஏழு மாத கர்ப்பிணி ஆனதால் "எந்த மருத்துவமனைக்கு செல்கிறீர்கள், எங்கே பரிசோதனை செய்துக்கொண்டிருகிறீர்கள்" என்று கேட்பதற்கே இத்தனை நாள் வனவாசத்தை உடைத்து இன்று பேசியிருக்கிறார்......

அவர் பதில் பெற்று கொண்டதோடு விட்டிருக்கலாம். கேள்வி என் மனைவியை நோக்கி திரும்புகிறது.
"உனக்கு பிரசவம் அந்த ஆஸ்பத்திரியிலையாம்மா பாப்பாங்க?"
"இல்லங்க..... நாங்க ஊருக்கு போயிருவோம்"
"ஐயோ... ஊருக்கா? எப்போ, எப்படி போவீங்க?"
"அடுத்த வாரம், ரயில்ல"
"ரயில்லையா..... கர்ப்பிணி பொண்ணுங்க கடலு, ஆறு தாண்டி போக கூடாதுண்ணு சம்பிரதாயம் இருக்கு தெரியுமா?"

என் மனைவி என்ன பதில் சொல்லியிருப்பாள் என நான் கேட்கவே இல்லை.ஏனோ நீண்ட நாட்களுக்கு பின் பெரியாரை படிக்க தோன்றியது...... .

Monday, August 24, 2009

சென்னை 370 - ஒரு மீள் பதிவு


நான் வசிக்கும் இந்த நகரம் தனது 370 வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு அதன் விழிகளை மெல்ல மூடி துயில் கொள்ள தயாராகி கொண்டிருந்தது, அதன் இயல்புக்கு மாறாக மெல்லிய சாரல் இரவின் ஈர பதத்தை இன்னும் அதிகரித்தது. நான் இருப்பது நரகமா, நகரமா என்ற கேள்வியை நோக்கி செல்லாமல், எனக்கும் இந்த நகரத்துக்குமான நெருக்கமான நாட்களை ஒரு கருப்பு வெள்ளை திரைப் படத்தை போல் மறு ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தது மனம் நான் கேட்காமலே.

மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த சென்னைக்கு என் முதல் மூன்று வருகையும் ஒரு சுற்றுலா பயணமாகவே அமைந்தது.

பள்ளி மாணவனாக சுற்றுலா வந்த நாளில், பெரும் புயல் ஒன்று அதிகாலையில் சென்னையை கடந்து போய் இருந்தது. பார்க்கும் இடம் எங்கும் வெள்ளக் காடாகவும், அகன்ற சாலைகளை மறித்து உடைந்த மரங்களும் கிடந்தன. எங்களை வழி நடத்தி வந்த ஆசிரியர்கள் திகில் கொண்டனரே அன்றி நாங்கள் அல்ல. மெட்ராஸில் தான் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்று இங்கே வசித்த உறவுக்கார அக்கா ஒரு முறை கூறியிருந்ததால் அந்த மழை நாளிலும் ஏதாவது சினிமா நடிகர்களை பார்த்து விட மட்டோமா என்ற ஏக்கத்துடன், தலையை ஜன்னலுக்கு வெளியே விட்டு பார்த்து கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். சமாதியில் அவரது கடிகாரம் ஓடுவது கேட்கலாம் என்று யாரோ கிளப்பி விட காது வைத்து கேட்டது இன்னும் மனசுக்குள்ளே ஓடி கொண்டிருக்கிறது. அண்ணா சமாதியில் கிடந்த தண்ணீருக்கு அடியில் பாசி இருக்கிறது என அறியாமல் கால் வைத்து, பொத்தென விழுந்து விட கை வலியோடு தான் ஊர் திரும்ப வேண்டியது ஆயிற்று.


பின் சென்னைக்கான அடுத்த பயணம் சன் டிவி என்ற அதிஷ்ட தேவதை வழியாக வந்தது. போனால் போகிறது என்று கிரிக்கெட் க்விஸ்ல் நானும் எழுதி போட.... அட சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தை காண வாய்ப்பு.... இந்த முறை சென்னையை நோக்கி ரயில் பயணம். என் வாழ்க்கையில் முதல் முதலாய் பொங்கலை ஆசையோடு வாங்கி சாப்பிட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு ரயில் பெட்டிகளின் முன் நின்று ஒவ்வொரு அழகிய பெண்கள் வரவேற்று கொண்டிருந்தார்கள். அட எங்கள் பெட்டியின் முன், உமா மகேசுவரி (பெப்ஸி உமா). நான் அப்போது தான் தொலைக்காட்சியில் வரும் ஒருவரை நேரடியாக முதல் முதலாக பார்க்கிறேன்,முகம், கை, கால் என் தோல் எங்கெல்லாம் தெரிந்ததோ அங்கெல்லாம் வெள்ளை பெயின்டை வைத்து அடித்திருந்தது போல் இருந்தது அவருடைய ஒப்பனை. இந்த அதிர்வு தீர்வதற்குள் இன்னொரு அதிர்ச்சியை சந்தித்தேன். ஆம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரோஜா பூவை பரிசாக கொடுத்து கை குலுக்கி கொண்டிருந்தார், எனக்கு முன்னால் சென்று கொண்டிருத்த அண்ணன்(!) ஒருவர், ரோஜாவை பெற்று கொண்டு கையை பிடித்து ஒரு முத்தத்தை கொடுத்து விட்டார். உண்மையில் உறைந்து விட்டேன், இப்படியுமா முத்தம் கொடுப்பார்கள், அதுவும் அறிமுகமே இல்லாமல், இவ்வளவு ஆள் கூட்டத்தில், எனக்கே வெட்கமாக இருந்தது. ஆனால் பெப்ஸி உமா சிரித்து கொண்டே எனக்கான ரோஜாவை எடுத்து என்னை எதிர் கொண்டார். கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து விட்ட முந்தைய சம்பவம் என்றபடியால், எனக்கு கை குலுக்கவே உதறலாக இருந்தது, அவர் விரல் படாமலே ரோஜாவை பெற்று கொண்டேன். ஏன் அந்த கணத்தில் கை குலுக்காமல் இருந்தேன் என்று நினைத்து பின் ரொம்ப நாட்கள் அல்பத்தனமாக வருத்தப்பட்டதுண்டு.

ஏதோ ஒரு உயர்தர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டோம் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது, என்னோடு வந்தவர்கள் 3 ஸ்டார் என பேசி கொண்டார்கள். அண்ணா அறிவாலயத்தில் தான் மதிய உணவு... பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா- நியுசிலாந்து அணிகளுக்கு இடையேயான விளையாட்டை பார்க்க அழைத்து செல்லப்பட்டோம். எல்லாமே ஆச்சரியங்களாக இருந்தன. டி.வியில் பார்ப்பது போன்ற சுவாரசியம் இல்லை, ரீப்லே வசதி இல்லாததால்,இருப்பினும் அந்த நேரடி அனுபவத்தை ரசிக்கவே செய்தோம். இந்த போட்டிக்கு நான் கொண்டு சென்ற வசன அட்டை "Hi Mark you can't Beat our Sachin", அந்த உலக கோப்பை தொடரில் யார் அதிக ரன் குவிக்க போகிறார்கள் என்ற கேள்வி அலை மார்க் வாக்கை சுற்றியும், சச்சினை சுற்றியுமே இருந்தது. நான் சச்சினின் தீவிர விசிறி ஆனதால் போட்டிக்கு சம்மந்தமே இல்லாமல் இப்படி ஒரு அட்டை. இந்த சென்னை பயணம் என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது, தீவிரமாக விளையாட்டு வீரனாக இருந்த நான் பின் கிரிக்கெட் விளையாடுவதையே குறைத்து கொண்டேன், ஆம் நாஷ் போட்ட பந்துகளில் கொஞ்சம் மிரண்டு விட்டேன், போதாததற்கு இந்தியாவும் அரை இறுதியில் பரிதாபமாக தோற்றது.

என் மூன்றாவது சென்னை பயணம் என் முதல் கல்லூரி பருவத்தில் வந்தது. பதினைந்து நாள் அகில இந்திய சுற்றுலா பயணத்தில் மும்பை துவங்கி ஸிம்லா வரை சென்று விட்டு இறுதியாக சென்னை வந்திருந்தோம். மற்ற மாணவர்கள் யாவரும் மெரீனாவின் அலைகளுக்குள் ஆனந்தமாய் விளையாட்டில் மூழ்கி விட நான் எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கே சென்ற போது தான் தெரிந்தது எனது ஒரே தாத்தா மூன்று நாட்களுக்கு முன் மரித்து விட்டது. எந்த தொடர்பு வசதிகளும் இல்லாததால் என்னிடம் தகவல் சொல்ல இயலாமல் இறுதி சடங்கை முடித்து விட்டதும் அறிந்து கொண்டேன். தாத்தாவை பற்றிய நினைவுகள் என்னை அழுத்த மனதுக்குள் அழுது கொண்டே, பின் எதையும் ரசிக்க பிடிக்காமல் நண்பர்களுடன் ஊர் வந்து சேர்ந்தேன்.

நான் பகிர்ந்து கொண்ட மூன்று பயணங்கள் ஒவ்வொன்றிலும் சென்னையில் எனது இருப்பு இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கும் குறைவாகவே இருந்தன. அதை பற்றிய என் நினைவுகளும் சிறிதே. ஒரு அழகிய மின்னலை போல் மனதில் வெட்டி ஓடி போகின்றவை. .... ஆனால் பக்கம் பக்கமாய் அசை போட தக்க வலிகளையும், வசந்தத்தையும் எனக்கு அனுபவ பாடமாக வகுப்பு எடுக்க குரூர புன்னகையுடன் காலத்தின் வடிவில் காத்து கொண்டிருந்தது சென்னை ... ஆம் "வேலை தேடி" வந்த சென்னை பயணத்தில்......

Saturday, August 22, 2009

பெரியார்


நான் பிறந்து, தவழ்ந்து, நடந்து, வளர்ந்த எம் முதல் வீட்டின் சிறிய வரவேற்பறை முழுவதும் காந்தி, காமராஜ், நேரு, நேதாஜி என தலைவர்களின் படங்களாய் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏனோ நீண்ட முகமும், மெல்லிய கண்ணாடியும், வெண் தாடியுமாய் வீற்றிருந்த அந்த தாத்தாவை எனக்கு பெரிதும் பிடித்திருந்தது. எனக்கும் அவருக்குமான முதல் உறவின் விதை அங்கே தான் விழுந்தது. எப்போது பள்ளி போய் வந்தாலும் என் மறு புன்னகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிராமத்து கிழவன் போல் புன்னகைத்து கொண்டே இருப்பார் சுவர் ஓரமாய்.

சட்டம் போடப்பட்ட இந்த புகைப்படங்கள் கால ஓட்டத்தில் சிதைந்து போய் விட, வீட்டில் வர்ணம் பூச கழட்டப்பட்ட பின் என்றுமே ஏற்றப்படவில்லை. ஆரம்ப கால பள்ளிக்கூட பாடங்கள் அத்தனையும் மனப்பாடம் செய்தே ஒப்பித்து விடுவதால் பாட திட்டங்களில் வந்த இந்த பெரியவரும் பத்தோடு பதினொன்றாகவே எமக்கு தோன்றியதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் புத்தக அட்டையில் வரும் இந்த முரட்டு தாடிக்காரர் கொஞ்சம் கவரவே செய்தார்.

காலம் கைப்பிடித்து வீதிக்கு அழைத்து வந்து முகம் எங்கும் அறைந்து ஒவ்வொரு கணத்தையும் வகுப்பெடுக்க, வாழ்க்கை பரமப்பதத்தில் முரண்டு பிடித்து எழுந்த போது தான் தெரிந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் பிறந்து இப்போது நான் வேகமாய் எழுந்து ஓட காரணமாய் இருந்திருக்கிறார் என்று........ அவர் பகுத்தறிவு பகலவன் என்று உலக தமிழரால் கொண்டாடப்படும் இளைய தமிழ் சமூகத்தின் பாட்டனார் ராமசாமி என்ற "பெரியார்".

தமிழக வரலாற்றின் தன்னிகரற்ற ஆளுமை பெரியார் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது, கூடாது. அந்த ஆளுமையை பற்றி சமீபத்தில் படித்த புத்தகம், ஆர்.முத்துக்குமார் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "பெரியார்".

பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது. தனக்கே உரித்தான அருமையான மொழியில் லாவகமாக அதை செய்திருக்கிறார் நூலின் ஆசிரியர். தனது முன்னுரையிலேயே "தமிழ் நாட்டில் புரட்சி" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் பெரியார் என்பதையும் இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது பெரியார் என்ற ஆளுமையின் உயரம் ஒரு அங்குலம் நம் மனதில் உயர்ந்திருக்கும் என்பதை ஆணித்தரமாக சொல்கிறார். அதை நிறைவாக செய்தும் இருக்கிறார். ஒரு மாமனிதரை பற்றி எழுதுகிறோம் என்று ஒரு பக்கமாக சாயாமல் ராமசாமியின் மைனர் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.

160 பக்கங்களில் பெரியார் வரலாறா என ஒரு நிமிடம் திகைக்க வைத்தாலும், இந்த "வைக்கம் வீரரின்" எந்த முக்கியமான கணங்களையும் ஆசிரியர் தொலைத்து விடவில்லை என்பதற்கு பெரியாரின் தந்தை வெங்கட்ட நாயக்கரின் பன்னிரெண்டாவது வயதில் இருந்து இந்நூல் துவங்குவதே ஒரு முக்கிய சாட்சி.

செப்டம்பர் 17,1879 அன்று வெங்கட்டருக்கும், சின்ன தாய்க்கும் இரண்டாவது மகனாக பிறந்தான் ராமு என்ற ராமசாமி. இந்த ராமசாமி தான் பிற்காலத்தில் நாடு முழுவதும் ராமன் படத்தை எரிக்க உத்தரவு இட போகிறான் என்று பாவம் அந்த தந்தைக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை.

ராமசாமி நல்ல வசதியான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் சின்ன வயதிலேயே தத்து கொடுத்து விட்டதால் வறுமையில் ஒரு முரட்டு சாமியாக வளர்ந்தான்.சிறு வயதிலேயே தான் பிறந்த குலத்தை விட தாழ்ந்த குல வீடுகளில் இருந்து பலகாரங்கள் வாங்கி சாப்பிடுவது உண்டு. இவை எல்லாம் வெங்கட்டரின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் ஆனது. விளைவு.... நான்காம் பாரத்தொடு திண்ணை படிப்பும் நின்றது.

பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய பின்பு தன் தந்தையோடு சேர்ந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து, பணம் கையில் புரள துவங்கிய போது அதை லாவகமாக கையாளவும் தெரிந்திருந்தது. இந்த சேமிக்கும் பழக்கம் அவரோடு இறுதி வரை தொடர்ந்தது.

சாமி பக்தர்களுக்கு ராமசாமியை கண்டாலே ஆட்டம் துவங்கி விடும். பக்தன் என்று தெரிந்தால் அத்தனை கேள்வி கேட்பார். பிடிவாதம் பிடித்து தன் மனதுக்கு இனியவளான நாகம்மாளை திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் பிறந்த பெண் குழந்தை இறந்து விட மனம் வெறுத்து ஆந்திரா, காசி, கேரளா என்று தேசாந்திரியாய் திரிந்தார். இந்த பயணத்தில் தான் ஆதிக்க சக்திகளும், மதம் என்ற மூட நம்பிக்கையும் பாமர மனிதனை எத்தனை பாடாய் படுத்துகிறது என்பதை உணர்ந்தார். ஊர் திரும்பிய போது முற்றிலும் மாறியிருந்தார்.

தன் நேர்மையாலும் நிர்வாக திறனாலும் ஈரோடு நகராட்சி பதவிகள் தேடி வந்தன.மக்களுக்காக மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். ராஜாஜியின் விருப்பப்படி காங்கிரஸில் இணைந்தார்.

ஈ.வெ.ரா. புரட்சியை தனது வீட்டில் இருந்தே துவக்கினார். ஆணாதிக்கத்தின் மறு உருவாக அவருக்கு தென்பட்ட தாலியை மனைவியிடம் கழட்ட சொன்னார். கள்ளுக்கடை மறியலின் போது தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தார். தன்னை தொடர்ந்து நாகம்மையையும், வள்ளியம்மையையும் போராட்ட களத்தில் இறக்கினார்.

ஆதிக்க சக்தியினரின் தலையீடு காரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாமல் இருந்த கேரளாவின் வைக்கம் தெருவில் யாவரும் நடமாட போராடியதால் 'வைக்கம் வீரர்' ஆனார்.

" பிராமணருக்கு மட்டுமே வக்காலத்து வாங்கும் கட்சி காங்கிரஸ், அந்த கட்சியை ஒழித்து கட்டுவதே முதல் வேலை " என்று கூறி காங்கிரசில் இருந்து விலகினார். எந்த மதத்தையும் அவர் கடிந்து கொள்ள தவறவில்லை, ஆனால் உட்பிரிவுகளால் பிளவுபட்டு கிடக்கும் இந்து மதத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் கடுமையாக சாடினார்.

தனது இயக்கத்தின் தொண்டர்கள் 'தோழர்' என்று அழைத்து கொள்ள அறிவுறுத்தினார். 1933-ம் வருடம் தன் காதல் மனைவி இறந்த போது உடலை பெட்டியில் வைத்து, வண்டியில் ஏற்றி சென்று சுடுகாட்டில் வைத்து எரிக்க செய்தார்-அது தான் ராமசாமி. 1938-ம் வருடம் நடந்த மகளிர் மாநாட்டில் பெண்கள் ராமசாமிக்கு 'பெரியார்' என்ற அடைமொழியை சூட்டினர்.

நீதி கட்சி திராவிடர் கழகம் ஆகி அதன் நிரந்தர தலைவர் ஆனார் பெரியார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதை கடுமையாக எதிர்த்தார். இது வெறும் எஜமானன் மாற்றமே என்று எழுதினார்.

பெரியாருடைய வாழ்கையின் ஒரு முக்கியமான காலகட்டம் திராவிடர் கழகம் பிளவானது. மணியம்மையுடனான திருமணத்தையே காரணம் காட்டி கழகத்திலிருந்து, அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி போன்றோர் விலகினாலும் கழகம் ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்தது என்பதற்கான பழைய நிகழ்வுகளை நூலின் ஆசிரியர் கோர்வை படுத்திய விதம் மிக அருமை.

பிராமணர் அல்லாத முதல்வர் என்ற தனிப்பட்ட ஈர்ப்பு காரணமாக காமராஜருடன் நெருங்கி பழகினார் பெரியார், பல தேர்தல்களில் ஆதரிக்கவும் செய்தார். ராஜாஜியோடு கொள்கை ரீதியாக பெரும் மோதலை தொடர்ந்தவர் அவரோடு கொண்ட நட்புக்கு பெரும் மரியாதை செலுத்தினார்.

பெரியாரால் கண்ணீர் துளிகள் என்று விமர்சிக்கப்பட்ட தி.மு.க, பின் ஆட்சிக்கு வர முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா பெரியாரின் ஆசியை பெற தவறவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் குறைகளை கடுமையாக விமர்சித்தார் பெரியார். தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளோடு தமிழகமெங்கும் சென்று சுயமரியாதை கருத்துக்களை விதைத்து ஒரு இனத்தின் விடிவெள்ளியாய் திகழ்ந்த பெரியார் டிசம்பர் 24, 1973 அன்று நம்மை விட்டு மறைந்தார்.

இப்புத்தகத்தை படித்து முடித்த தினம் வந்த ஒரு குறுஞ்செய்தி என்னை திகைக்க வைத்தது. அது " 'Swamiye saranam aiyappa' Send it to 18 ppl, except me. u will get gud news tomorow. If U neglect, bad luck start 2day for 9 years.... this sms came from shabari malai temple....."

கடவுள் இருக்கிறார் என்று நம்பப்பட்ட மேல்வானில் இன்று செயற்கை கோள்கள் சுற்றி கொண்டு இருக்கின்றன. இருப்பினும் அந்த அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தி இன்னும் மனிதர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது ஒரு அறிவிலி சமூகம். பெரியார் இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் பெரியாரின் கருத்துக்களை பரப்பும் இது போன்ற நல்ல படைப்புகள் சமுதாயத்திற்கு இன்றும் தேவை என்பதையே காலம் நமக்கு உணர்த்துகிறது.


இந்த புத்தகத்தை வாங்க கீழே சொடுக்கவும்.

http://nhm.in/shop/978-81-8493-033-7.html

Wednesday, August 19, 2009

உலர துவங்கிய நாட்கள்


'அன்பே ஆருயிரே'
எனத்துவங்கும் நகைப்புக்குரிய
காதல் கடிதங்கள் யாவும்
பக்கத்து வீட்டு அக்காவை
ஞாபகப்படுத்தி விடுகிறது......

அவள் ஓடிப்போன ஒரு
அர்த்தமில்லாத பண்டிகை நாளை
இன்றும் சபித்துக் கொண்டிருக்கிறேன்.......

இரகசியமாய் எனக்கு அவள்
எழுதிய ஐந்தாவது கடிதத்திலேயே
அடையாளப்படுத்த முடிந்தது
ஒரு தோல்வியின் சரிதையை.......

'காதலும் வாழ்க்கையும்' என
புத்தகம் எழுதியிருந்தால்
பெரும் பணக்காரியாகியிருப்பாய் என்ற
என் மனதின் மறுமொழியை
அனுப்பியிருந்தால் நிச்சயம்
மறுதலித்திருக்க மாட்டாள்......

பின் இடைவெளி விட்டு
தொடர்ந்த கடிதங்களில்
அவளின் நடுக்கமுற்ற
வரிகளின் உள்ளிருந்த
நிஜத்தை உணரும் முன்
உலர துவங்கியிருந்தது
அவளின் நாட்பொழுதுகள்......

பிரேத வண்டியில் இருந்து
போலீஸார் புடை சூழ
உயிரற்ற அவளுடல் இறங்க
காதல் புனிதமானதென்று
ஏதோவொரு பைத்தியக்காரன்
சொன்னது ஞாபகம் வந்தது......

Monday, August 17, 2009

மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி - கூகிள் ஃபில்டர் ஒரு எளிய விளக்கம்


"மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி " - மொக்கை ராசாக்கள் தப்பா நினைக்காதீங்க, மின்னஞ்சலில் மொக்கைகள் போடுவதற்கும் ஒரு தனி திறன் வேண்டும்.... இது உங்களை குறை சொல்லும் பதிவு அல்ல....... மேலும் கணிப்பொறியிலும், மின்னஞ்சல் உலகிலும் அசர வைக்கும் அறிவை பெற்றிருக்கும் வல்லுனர்களும் இந்த பதிவை தவிர்க்க.. அப்புறம் உங்க டைம நான் வேஸ்ட் பண்ணிட்டேண்ணு சொல்லப்பிடாது ஆமா..

இணைய தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், மின்னஞ்சல் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.மின்னஞ்சல் சேவையை பல பன்னாட்டு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. கூகிள், யாஹூ,ரீடிஃப் போன்றவை மின்னஞ்சல் சேவை வழங்கி வரும் சில முக்கியமான நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவங்களுக்குள் ஏற்படும் போட்டியை சமாளிக்க புது புது மின்னஞ்சல் வசதிகளை உபயோகிப்பவருக்கு கொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது "குருப்ஸ்(Groups)" எனப்படும் "குழுக்கள்" சேவை.

இன்றைய தேதியில் மட்டும் தமிழில் சுமார் 1300 குழுமங்கள் உள்ளன. நான் உட்பட நம்மில் பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குழுமங்களில் உறுப்பினர்களாக இருக்கிறோம். குழுமங்கள் நமது எழுத்து திறமையை அதிகரிப்பதற்கும், கலந்துரையாடவும் ஒரு சிறந்த களமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எண்ணற்ற குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் நண்பர்கள் தனக்கு தனி பட்ட முறையில் வரும் மின்னஞ்சல்களை தவற விடுவதும் இதில் வாடிக்கையாகி விடுகிறது. அவர்களுக்கு கூகுல் வடிகட்டி (Google Filters) ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

கூகுல் வடி கட்டியை பயன்படுத்தும் முறை

1. நமது மின்னஞ்சலை திறந்து கொள்ளவும் (எ.கா. எனது மின்னஞ்சலின் முகப்பு இது. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல்களை வடி கட்ட வேண்டும்)


2. நாம் வடிகட்ட வேண்டிய குழுமத்தின் எதாவது ஒரு மின்னஞ்சலை திறந்து கொள்ளவும்.Reply(பதிலளி)என இருக்கும் பொத்தானுக்கு அடுத்து இருக்கும் பொத்தானை அழுத்தவும்.அதில் மூன்றாவதாக வரும் Filter Message like this (இது போன்ற வடி கட்டிய செய்திகள்)-ஐ சொடுக்கவும்(click).


3. இப்போது எப்படி நீங்கள் வடிகட்ட விரும்புகிறீர்கள் என்பதை தெரிவு செய்யவும் (எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமததிற்கு வரும் எல்லா மின்னஞ்சலையும் வடிகட்ட வேண்டும்). நீங்கள் தேர்வு செய்த பின் Next Step (அடுத்தபடி) என்ற பொத்தானை சொடுக்கவும்.


4. இந்த பகுதியில் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சலை என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.(எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல் யாவும் இன்பாக்ஸ் செல்லாமல் புதிய லேபில் உள்ளே செல்ல வேண்டும்.)


5. நீங்கள் வடி கட்ட விரும்பிய குழுமத்திற்கு இடும் புதிய லெபில்-ஐ இங்கே கொடுக்கவும். (எ.கா. நான் எனது புதிய லேபிழுக்கு 'sx' என பெயர் வைத்துள்ளேன்)


6. இப்போது நீங்கள் Create Filter(வடிப்பானை உருவாக்கு) என இருக்கும் பொத்தானை சொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு புதிய லேபில் உருவாவதுடன், நீங்கள் குறிப்பிடும் குழுமத்திற்கு வரும் மின்னஞ்சல் யாவும் அந்த லேபிழுக்குள் தானாகவே போய் விடும்.( எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் எல்லா மின்னஞ்சல்களும் இப்போது இன்பாக்ஸ் போகாமல், sx என்ற லேபிழுக்குள் போய் விடும். create filter என்ற போத்தானுக்கு வலப்புறமாக இருக்கும் வெளியை டிக் செய்யும் பட்சத்தில் ஏற்கனவே அந்த குழுமத்தில் இருந்து வந்த எல்லா மின்னஞ்சல்களும் sx என்ற லேபலுக்குள் போய் விடும்.)


7. நிறைய குழுமங்களும், நிறைய லேபல்களும் இருக்கும் பட்சத்தில் உங்கள் மின்னஞ்சல் முகப்பின் இடது ஓரம் இது போல் காட்சி தரும்.


Google Filters குறித்த உங்கள் சந்தேகங்களை stalinfelix2000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் செய்யலாம்.. மேலும் விமர்சனங்களே ஒரு எழுத்தாளனை உருவாக்கும்... உங்கள் விமர்சனங்களை இங்கே பதிவு செய்யவும்

Friday, August 14, 2009

ஒரு கிராமத்தானின் கடிதம் - நண்பனுக்கு




மக்கா.... சோமா இருக்குதியளா? பயக்க எல்லாம் சோமா இருக்கானுவளா? ஊரில வேற என்னடே விசேசம்? பேப்பர்லையும், டிவிலையும் பாத்துருப்ப, டெய்லி பண்ணி காச்சல்ல பத்து பேரு செத்து போரானுவளாம். சோக்கேடுனால செத்து போரவனுவள விட இவனுவ கிளப்புற பீதியில பேதி வந்து செத்துருவானுவ போல இருக்கு. இங்க எவன பாத்தாலும் மூக்குல கைய வச்சிக்கிட்டே நடக்கியானுவ. முந்தா நாள் வரைக்கும் மூக்குக்க கிட்ட வந்து துப்பி துப்பி பேசினவனுவ இப்ப கிட்டையே வரல.

"யான வந்தா ஆள கொல்லும், மைரையா பிடுங்கும்னு" இருந்த நமக்கே கொஞ்சம் பேடியாதான் இருக்கு.ஜலதோசத்துல எள்ளு போல மூக்கு ஒழுவுனா கூட பண்ணி காச்சல் வந்துட்டோன்னு பயர வேண்டியது இருக்கு.சரி மக்கா எனக்கு தெரிஞ்ச ரெண்டு, மூணு விசையத்த எழுதியன், நீயும் நம்ம பயலுவ கிட்ட சொல்லு... சரியா??

பண்ணி காச்சல் ஏதோ ஒரு வைரசுனால வருதாம். இந்த சோக்கேடு மொதல்ல பாரின்ல தான் வந்துது, பிறவு பாரின்ல இருந்து நம்ம நாட்டுக்கு வந்த பயலுவளால நம்ம எடத்துல பரவீட்டு இருக்கு. இது காத்துல தும்முனாலோ, துப்புனாலோ பறவுறனால தான் பெரிய மண்ட வேதன.

இங்கேரு... எவனுக்காவது காச்சலோ, பீச்சலோ, மூக்கு ஒளுக்கோ ரெண்டு நாளைக்க மேல இருந்தா ஆசுபத்திரிக்கு போவ சொல்லு. பீடிய குடிச்சிட்டு எங்கேயாவது முக்குல கமந்து கிடக்க போரானுவ. பிறவு ஒஸீல எவனாவது ஓல்ட் மங்க் தந்தான்னு குடிச்சிட்டு கிடக்காதிங்க, இந்த நேரத்துல நல்லதில்ல சொல்லிட்டேன்.

பின்ன ஆசுபத்திரியில பெரிசா கியூ நிக்குன்னு சொல்லியானுவ. இந்த கவன்மன்று காரனுவள நெனச்சா எரிச்சலா இருக்கு. இங்க மனுசன் பேடிச்சு பெய் கிடக்கான், இவனுவ என்னாண்ணா ரெத்தம் எடுக்கியது, டெஸ்ட் பண்ணியதுன்னு நேரத்த ஓட்டிட்டு , சோக்கேடு இருக்கானு நாலு நாளைக்கு சொல்ல மாட்டேங்கிறானுவளாம். என்ன மக்கா செய்யது சும்மாளா சொன்னானுவ "உயிர் பொழைக்கணுமுண்ணா ஒண்ணுக்கு அடிச்சு தான் ஆகணுமுன்னு".

மக்கா சுத்தமா இருந்தா இந்த சோக்கேடே கிட்ட வராதுன்னு சொன்னானுவ. குளத்துல வெள்ளம் கிடக்கனால டெய்லி மூணு நேரம் குளிங்க. பைனியோ, பப்பாளியோ கிடச்சா அடிச்சு சப்புங்க... நேத்து ரேடியோவுல சொன்னானுவ துளசி தின்னாலும் கொள்ளாமுண்ணு.

பிறவு வேற யாதாவது வெவரம் வேணுமுண்ணா கீழ உள்ள நம்பருக்கு போன போடுங்க.
044-24321569, 25305000, 25305723, 011-23061469, 1075 .

இப்படிக்கு
ஒங்க கூட்டுக்காரன்

Wednesday, August 12, 2009

வட்ட பேரு - II


வழக்கம் போல் மதியம் உண்ட மயக்கத்தில் கொட்டாவி விட்டபடி வேலை(!) செய்து கொண்டிருந்தேன் அலுவலகத்தில்...... நகரும் நாற்காலியில் மெதுவாக ஊர்ந்து அருகில் வந்த பக்கத்து இருக்கை தோழன் " நண்பா... விசயம் தெரியுமா?.. நம்ம ஆபீஸ்......................" என்றான். "யாரு சொன்னா?" எரிச்சலுடன் நான் கேட்டேன்... "நம்ம பாக்கியராஜ் தாம்பா" என்றான். "பாக்கியராஜ்!" என முழித்து வினவிய போது... "யோ பாக்கியராஜ் தெரியாதா" என கேட்டு காதில் மெதுவாய் கிசு கிசுத்தார்..

ஆச்சரியப்பட்டு போனேன். என் வட இந்திய மேலதிகாரி தான் பாக்கியராஜ் ஆகி இருந்தார். மெல்ல சிரித்து விட்டேன்.. எல்லோரிடமும் கொஞ்சம் சிடுமூஞ்சியாக இருப்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாக்கியராஜ் ஆகி இருந்தார். இன்னும் மனம் யோசிக்க இவருடைய முகம் நிஜ பாக்கியராஜோடு எங்கோ பொருந்தி போனது..

வருடங்கள் வேகமாய் உருண்டோடி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை... பால்ய வயதில் வட்ட பேருகள் பெரும்பாலானவை முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.... இன்று ஆயிரக்கணக்கான வான் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வாடிக்கையாளரோடு கணிப்பொறியில் பேசி வேலை பார்க்கின்ற இடங்களில் வட்ட பேரின் வடிவும், நிறமும் கொஞ்சம் மாறியிருக்கிறது, ஆனால் தொலைத்து விடவில்லை. இன்றைய வட்ட பேருகள் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களின் பெயர் தாங்கியே வருகிறது... எ.கா. கவுண்டர், சேம் ஆண்டர்சன், சரளா அக்கா....

சிறு வயதில் ஒவ்வொரு கிராமத்து வாண்டுக்கும் ஏதோ ஒரு வட்ட பெயர் இருந்தே தீரும் என்பது எழுத படாத விதி.. எனது கிராமத்தில் ஒரே ஒரு சிறுவனுக்கே ஐந்துக்கு மேற்பட்ட வட்டபேருகள் இருந்ததாய் ஞாபகம். ஒரு கிராமத்தில் வட்டபேருகள் இல்லாத சிறுவனை தேடி எடுப்பது வெகு சிரமம்.

வட்டபேருகள் இல்லாத சிறுவனை நீங்கள் கண்டு பிடித்து விட்டால், அவன் தனித்தே தெரிவான்.. சுருக்கமாய் சொன்னால் எந்த வம்பு தும்புக்கும் போகாத அம்மாஞ்சி... ஆனால் காலம் ஏதோ ஒரு கணத்தில் அவர்களுக்கும் ஒரு பெயரை ஒளித்து வைத்து விடுகிறது "ஊத்து" என்று.

சுவாரசியம் பாருங்கள்... ஒரே வட்ட பேருடைய இரண்டு நபர்கள் பெரும்பாலும் நம் வாழ்க்கையில் கடந்து போயிருப்பார்கள், சில நேரம் அதற்கு நீங்களே ஒரு காரணியாகவும் இருந்து இருப்பீர்கள்.. புரியவில்லையா? உங்கள் ஊரில் "மாக்கான்" என்ற வட்ட பேருடைய ஒருவன் இருக்கிறான்.. அந்த பெயர் உங்களுக்கு (இது நீங்கள் என்பது அல்ல, நானாகவோ இல்லை வேறு ஒருவராகவோ இருக்கலாம்) மிகவும் பிடித்து(!) போய் விடுகிறது. உடனே உங்களுக்கு மிகவும் பிடிக்காத வகுப்பு மாணவனுக்கு அந்த பெயரை சூட்ட அவன் எதிரிகளிடம் சிபாரிசு செய்வீர்கள்... நீங்களே வட்ட பேரு சூட்ட உங்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி "பலம் ".

- தொடரும்

வட்டபேரு - I படிக்க இங்கே சொடுக்கவும்

Sunday, August 9, 2009

ஒரு நட்பின் தேடல்......



http://youthful.vikatan.com/youth/stalinpoem10082009.asp

என்னால் அனுப்பப்படும்
எல்லா குறுஞ்செய்திகளும்
இடம் அறியாமல்
மரணித்து விடுவதை
உன் அலைப்பேசியின்
மவுனம் உணர்த்துகிறது.............

உன் பிரத்யேக தொலைபேசியின்
விடையில்லா மணியோசைக்கு
பின்வரும் பதிவு செய்யப்பட்ட
பெண்ணின் குரலும்
பரவசத்தை தவிர்த்து
பயத்தையே தருகிறது............

அடுக்கப்பட்ட நாட்குறிப்பேடுகளில்
தேடி எடுத்து அனுப்பிய
உனக்கான மின்னஞ்சலும்
பாதி வழியிலேயே
குற்றுயிராகி திரும்பி விடுகிறது.........

நம் இருவருக்குமான பிரழாத
நினைவுகள் முட்டி சாய்க்க
விழி மீதிருந்து
பிரிந்தோடிய கண்ணீர்
மார்‌பெங்கும் படர்ந்தேகி
அணை கட்டி நிற்கிறது
மொழியற்ற வலியின் கவிதையாய்......

Friday, August 7, 2009

தோழர் முரளி ( 25.05.1954 - 6.08.2009)


மலையாள திரை உலகின் இன்னொரு குறிஞ்சிப் பூவும் உதிர்ந்திருக்கிறது. குணசித்திர வேடங்களில் தனித்துவமான கதாப்பாத்திரங்களில் வாழ்ந்து மறைந்திருக்கிறது ஒரு துருவ நட்சத்திரம். அவர் தோழர் முரளி.

1954- ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்து, மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -ன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்று, சட்டம் பயின்று, கேரள அரசு ஊழியராகி, "சிதம்பரம்" என்ற சினிமாவில் அறிமுகமாகி, "நெய்த்துகாரன்" திரைப் படத்திற்காக இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று மலையாளம், தமிழ் என சுமார் 300 திரைப்படங்களில் நடித்து மார்க்ஸிஸ்ட் கட்சியின் பெரும் ஆதரவாளராய் இருந்து பெருமை மிகு கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் இருந்து ஒய்ந்திருக்கிறான் இந்த கலைஞன்..

எந்த வேடமானாலும் தன் உடல் அசைவுகளாலும், முகப் பாவங்களாலும் சாதாரண சினிமா பார்வையாளனையும் கட்டி போட்டவர் முரளி. கதையின் நாயகனாக அவர் நடித்த "ஆகாச தூது" திரைப்படம் மலையாள திரை உலகின் முக்கியமான திரைப்படம். "நெய்த்துகாரன்" அவருடைய கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வெற்றி மாறன் (பொல்லாதவன்), சரண்(ஜெமினி) போன்றோர் மட்டுமே இவரை சிறப்பாய் பயன் படுத்தினர்.

ஏராளமான மாநில அரசு விருதுகளையும், மத்திய அரசு விருதினையும் பெற்ற முரளியின் மரணம் மலையாள கலை உலகிற்க்கும், மார்க்ஸிஸ்ட் காட்சிக்கும் பெரும் இழப்பே.

பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாத கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.

Monday, August 3, 2009

தேவதையே வா.....

மின் மினி பூச்சிகள்
தீண்டிச் செல்லும்
தனிமையின் மை
படர்ந்த இரவில்
முழு நிலவொளியால்
வெடித்த வானை நோக்கி
விழி மூடாது
காத்திருக்கிறேன்....
கதைகள் சொல்லும்
எனக்கான தேவதையின்
வருகைக்காய்.......
.