Thursday, June 25, 2009

முரண்



ஏசுவை
நம்பும் அளவிற்கு
அவரை பற்றி
பதினாறு ஆண்டுகள்
கற்பித்த பாதிரியாரை
பாதி அளவும்
நம்புவதில்லை மனம்.....

Thursday, June 18, 2009

ஏழு கழுத வயசு.....



இரண்டொரு நாளுக்கு
ஒரு முறை
முக சவரம்
செய்த போதோ....
அரசல் புரசலாய்
எல்லோரும் எனக்காய்
பெண் பார்க்கும்
படலத்தில் இறங்கிய போதோ
உணராததை.....
எதிர் வீட்டில்
புதிதாய் குடிவந்த
பள்ளி மாணவி
"அங்கிள்" என அழைத்து
உணர்த்தி போனாள்...............

Saturday, June 13, 2009

வளையத்தில் சிக்கும் பருவங்கள்...........


பெரும் மழைக்கு
பின் வந்த ஒரு
கல்லூரி விடுமுறை நாளில்
என் அபிமான நாயகனை போல்
மாட்டி கொண்டேன்
சிறு வளையம் ஒன்றை
இடது காதோரமாய்...

நான்காம் பருவத்தின்
முதல் நாளில்
அதை பார்த்த
கல்லூரி தோழன் ஒருவன்
'கலாசார சீரழிவு' என்றும்
'கலிகாலம்' என்றும்
தன் போதை தீரும் அளவு
திட்டி தீர்த்தான்....

நேற்றைக்கு முந்தினம்
என் ரயில் பயணத்தில்
சற்றே வெள்ளை ஆப்பிள்
நிறத்தில் இருந்த
பெண் ஒருத்தியின் தொப்பிளின்
வல பக்கமாகவும்
இட பக்கமாகவும்
தொங்க விடப்பட்டிருந்த
வளையத்தை பார்த்து
அநியாயத்துக்கு ஞாபகத்தில்
வந்து போனான்
என் அருமை சிநேகிதன்....

Friday, June 5, 2009

அழகு...



அலுவலக படிக்கட்டுகளில்
மேல் நாட்டு வாசனை திரவியத்தின்
மணம் கமிழ
எனை கடந்து போன
யுவனியை விட
அழகாகவே இருக்கிறாள்
அதே அலுவலக
சமையல் அறையில்
வியர்வை வழிய
பாத்திரம் கழுவி கொண்டிருந்த
என் வயதை ஒத்த
அக்கா ஒருத்தி........