Saturday, March 28, 2009

கூந்த வண்டி

நீண்ட நாட்களுக்கு பின் நுங்கு சாப்பிட்டேன். ஒரே நுங்கு, இரண்டு 'கண்ணு'களுடன். சாப்பிட துவங்கிய உடனே சாப்பிட்டு விட்ட உணர்வு. பால்யத்தில் 'நுங்கோடு கொண்ட வாழ்வும் அதன் ருசியும்' ஒரு முறை நாவு வரை வந்து போனது.

கிராமத்தில் நல்ல ஆரோக்கியமான மனிதரை பனை மரத்தோடே ஒப்பிடுவார்கள். பனை ஏறுவது மட்டுமே தொழிலாக கொண்ட மூத்த தலைமுறை கால போக்கில் நலிந்து, ஓய்ந்து போக யாருமே சீந்துவார் இன்றி போனது பனை மரமும் அதன் நுங்கும். கால் கழுவ போகும் யார் மேலாவது விழுந்து தொலைக்கும் பனங்காய் மட்டுமே ஞாபகப்படுத்தி போகும் பனை மரத்தின் இருப்பிடத்தை...

பனை மரங்களோடு உலா வரும் பேய் கதைகள் அலாதியானது... ஒரு நிஜ திகில் சித்திரம் போல அதை விவரிக்கும் பாட்டிக்கு தெரியாது, அன்றைய இரவு நாங்கள் தூக்கம் தொலைக்க போகிறோம் என்றும், சில நாட்கள் பனை அடிவாரம் விலகியே நடப்போம் என்பதும். அந்த நாட்களின் பனை மரங்களோடு வரும் பேய் கதைகளுக்காகவே ஒரு தனி புத்தகம் எழுதலாம்.

கோடை விடுமுறை காலங்களில் நுங்கு ப றி ப்பதும் எங்கள் பெரும் பொழுது போக்குகளில் ஒன்று. ஊரில் எந்தெந்த மரங்களில் நுங்கு இருக்கிறது என்பதை, ஏதாவது ஒரு நண்பன்
முன் தினமே கண்ணமிட்டு செய்தி சொல்லி விடுவான். பெரும்பாலும் மரத்தின் உரிமையாளருடன் பேரம் பேசி கொள்வோம். பாதிக்கு-பாதி என... ஆனால் அவருக்கு போய் சேருவது என்னவோ மூன்றில் ஒரு பகுதி தான்.

இந்த உடன்பாட்டுக்கு வராத உரிமையாளர் இரண்டு வாரங்கள் கழித்து ஊர் குளத்தில் நின்று பேரம் பேசியவனின் தந்தையையும்-தாயையும் பற்றி குல கேள்வி எழுப்பி கொண்டு இருப்பார். யாருமே பேரம் பேசாத கட்டத்தில், காணாமல் போகும் நுங்கிற்காய் ஊரில் உள்ள அத்தனை இளவட்டங்களின் தந்தையரும்-தாய்மாரும் வம்பு இழுக்கப்படுவர்...

இரண்டு, மூன்று குலைகள் என்றால் பனை மரத்தடியில் இருந்து சாப்பிட்டு விட்டு ஓடி விடும் நாங்கள், அதற்கு மேல் கிடைக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு நண்பனின் வீட்டில் போய் சாவகாசமாய் அமர்ந்து நுங்கை எடுத்து 'ஸர்பத்' கலந்து சாப்பிடுவோம். தேவர்களின் கதைகளில் வரும் தேவாமிர்தம் அது தான் எங்களுக்கு அப்போது.

சாப்பிட்டு முடித்த நுங்கின் எஞ்சிய பகுதியே எங்களுடைய பாஷையில் 'கூந்த'. நல்ல மூன்று கூந்த எடுத்து கொள்ள வேண்டும். சம அளவுள்ள கூந்தை இரண்டு எடுத்து அதன் நடுவில் வலுவுள்ள குச்சியை அடித்து இணைக்க வேண்டும். பின் நீளமான தென்னை மட்டையின் ஒரு முனையில் இன்னொரு கூந்தையையும் இன்னொரு முனையை இணைக்கப்பட்ட இரு கூந்தைகளுக்கு நடுவேயும் சொருக வேண்டும். பின் என்ன, கீ... கீ... பீ... பீ... தான். இது தான் எங்கள் கூந்த வண்டி.

நல்ல அழகான கூந்த வண்டி வைத்திருப்பவனே அன்றைய எங்களுடைய நாயகன். ஒருவருடைய வண்டியை மற்றவர் மேல் மோதி பெரும்பாலான நாட்கள் சண்டையிலே முடிந்து விடுவதும் சுவாரசியம். இன்றைய இரு சக்கர வாகனங்கள் எதுவும் பிரசித்தம் பெறாத அந்நாட்களில், கிராமத்தின் எல்லா வாண்டுகளின் வீடுகளிலும் ஒரு கூந்த வண்டி ஓரமாக "பார்க்" செய்யப்பட்டு இருக்கும்.

காலங்களில் நாங்கள் தொலைத்த கூந்த வண்டியின் தடங்கள் மண்ணில் இருந்து மறைந்தாலும், மன கண்ணில் இருந்து மறையவில்லை...


Wednesday, March 25, 2009

அகதி கூடு

வரலாற்றின் இன்றைய
கனவு பக்கங்களின் கூட்டில்
மட்டுமே அகதியாய் நீ....

வீண் கண்ணீர் துளிர்க்க விடாதே
ஒவ்வொன்றிற்குமாய் உண்டு
விலை ஓராயிரம்...

சோம்பல் முறித்து
அச்சம் உடைத்து
ஆணவம் தகர்த்து
தந்திரம் எரித்து
தோல்வியை தாவி
பணபலம் புண் ஆக்கு

அக்கூடு உடைபடும் நாளில்
இன்றைய போட்டியாளன்
உன் விழா மேடையின்
கடைசி பார்வையாளனாவன்......

Sunday, March 15, 2009

கவிதை எழுத துவங்கிய நாளில்.....

உடைந்து கிடக்கிறது வானம்
உன் வீட்டு ஒற்றை
முற்றத்தை பார்த்து

கதவடைத்து காத்து
கிடக்கிறது காற்று
பரவி கிடக்கும் உன் வாசம்
பரந்து விடாமல் இருக்க

மற்றோர் மிதித்திட கூடாது
என்று எண்ணி
மிரண்டு கிடக்கிறது - உன்
பாதம் பட்ட இரு நிலம்

தனக்குள்ளே கண்ணீர் சொரிந்து
தன்னை இரட்டிப்பாக்கி
வழிந்து நிற்கிறது
உனக்கான கடைசி தண்ணீர்

தன்னுள் வந்து அடைய
போகிறாய் என்று அறிந்து
தன்னை அணைக்க போராடி
தோற்று நிற்கிறது நெருப்பு

அசைவுகளற்ற உன்னை
காரணம் ஏதும் சொல்லாமல்
பின் தொடர்கிறது
என் முதல் கவிதை..........

Monday, March 2, 2009

அந்நாட்கள்...........

தேவதைகளால் சபிக்கப்பட்ட
காலத்தை எப்போதுமே
துல்லியமாய் பதிவு
செய்ய முடிவதில்லை
அந்நாட்களில்..........

கொல்லைப்புறம் ஓடும் மனக் குரங்கால்
வேட்கையான அந்த பகல்களும்
தூக்கமற்ற அந்த இரவுகளும்
எப்போதுமே நீண்ட மலைப்பாம்பை
போல் நீண்டு செல்கிறது
அந்நாட்களில்..........

மின்னல் போல்
கண் சிமிட்டி செல்லும்
புன்னகையை விட
தலையணை உறைகளில்
பதிந்து கிடக்கும்
கண்ணீரின் கறைகள் சொல்லும்
கதைகள் ஏராளம்
அந்நாட்களில்..........

கடிவாளம் இல்லா
குருட்டு குதிரையின்
நீள் பாய்ச்சலைப் போல்
இலக்குகள் அற்று
நடை போடுகிறது பாதங்கள்
அந்நாட்களில்..........

வாழ்க்கையில் விடியல் வெள்ளி
முளைக்கும் என
யோசிக்கும் போதே பிடிவாத
குழந்தையை போல்
அழுது விடுகிறது
அரை சாண் வயிறு
அந்நாட்களில்.........